ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கங்கர் சிங். இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதிக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை நடத்திவருகிறார். இவருடைய மகன் சந்தீப் சிங் (8). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கங்கர் சிங் சமீபத்தில் ஆஸ்திரேலியே சென்று திரும்பி இருந்தார். அப்போது அவர் அங்கிருந்து சாக்லெட் வாங்கி வந்து இருந்தார். நேற்று முன் தினம் சந்தீப் சிங் தனது தந்தை ஆசையாக வாங்கி வந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளார்.
அப்போது, சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘சிறுவனின் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லெட் வாங்கி வந்திருக்கிறார். சிறுவன் பள்ளிக்கு சாக்லெட் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதேபோல், சனிக்கிழமை காலை 10 மணியளவில் சாக்லெட் சாப்பிட்ட சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே சிறுவனை வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பள்ளி நிர்வாகம், இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதனால் இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை’ எனக் கூறினர்.