அரச ,தனியார் துறையினரை ஒன்றிணைத்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

கட்டட நிர்மாணத்துறையில் வேலைகள் நிறுத்தப்படுவதால் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு  தொழில் இல்லாமல் போகும் பின்னணியில் அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின்  தலையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடிய போது, நகர அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவு செய்வதற்கு விரும்பும் தனியார் முதலீட்டாளர்கள் காணப்படுவதால், அதற்கு திறைசேரியினால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரச மற்றம் தனியார் துறையினரை ஒன்றிணைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று, நகர அபிவிருத்தியுடன் தொடர்புடைய திட்டங்கள் குறித்து இங்கு விரவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல திட்டங்கள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2023 ஆம் ஆண்டில் இந்த அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். உரிய திட்டங்களை மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கும் முன்வைத்து அவர்களது தேவைகளையும் கருத்திற் கொண்டு பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் தனியார் நிறுவனங்களால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக்க பர்னாந்து குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கட்டட நிர்மாணப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் அவற்றின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார். இதனால் அந்தத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்ய ஏற்கனவே நிதியைச் செலுத்திய மக்கள் தமக்கு முறைப்பாடு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் குழு முன்னிலையில் தெரிவித்தனர். உரிய ஒப்பந்தங்களில் காணப்படும் நிபந்தனைகளுக்கு அமைய விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ தேனுக விதானகமகே, கௌரவ அருந்திக்க பர்னாந்து, கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.