கோயம்பத்தூர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
“கோவை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் கடந்த 2013-ன் படி பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாநகராட்சி சார்பில் போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.
எனவே, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்,உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக்கூடாது.
இந்த தடை சட்டத்தை மீறி யாராவது செயல்படும் பட்சத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் 2013-ன் படி காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற செயலால் ஏதேனும் உயிர் இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர்களின் குடும்பத்தினருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் தலா ரூ.15லட்சத்துக்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.