குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதன் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில், குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வின் கோட்டையை அங்கு தகர்க்க வேண்டுமென்ற இலக்குடன் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரமாகப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர்கள் சூராவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். நேற்றைய தினத்துடன் அங்கு முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நேற்று அங்கு பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அதில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில், குஜராத்துக்கு வளர்ச்சி கொள்கையை அமல்படுத்தியதே பா.ஜ.க மீது மக்கள் மீண்டும்… மீண்டும் நம்பிக்கை வைப்பதற்கு முக்கியக் காரணம். அதனால்தான் கடந்த 27 ஆண்டுகளாக, தொடர்ந்து பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. குஜராத்தில் பா.ஜ.க வரலாறு காணாத வெற்றியை இந்த முறையும் பதிவுசெய்யும். மக்கள் எங்கள் கட்சி மீதும், எங்கள் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிமீதும் முழு நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
எல்லா கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு, ஆனால் அந்தக் கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது மக்களின் முடிவு. குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி எங்கும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். ஒருவேளை, ஆம் ஆத்மி கட்சியின் பெயர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலில், இல்லாமல்கூட போகலாம். அதே போல குஜராத்தில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சி நெருக்கடியில் இருக்கிறது. அதன் தாக்கம் குஜராத் தேர்தல் முடிவிலும் தெரியும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை போல அரசியலில் நீடிக்க, நீண்ட முயற்சிகள் அவசியம். அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டும். யாராக இருந்தாலும் கடினமாக உழைத்தால் நல்லது என்று எப்போதும் கருதுகிறேன். ஆனாலும், மீண்டும் சொல்கிறேன்… அரசியலில் நீடித்த முயற்சிகள் மட்டுமே பலனைத் தரும். எனவே, திடீரென புறப்பட்ட காங்கிரஸ் யாத்திரையின் பலனை பொறுத்திருந்து பார்ப்போம்.
குஜராத்தின் பாதுகாப்பும், தேசிய பாதுகாப்பும் வெவ்வேறான பிரச்னைகள் அல்ல. குஜராத் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது. நாடு பாதுகாப்பாக இல்லை என்றால், குஜராத் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? எனவே, அனைத்து மாநில சட்டசபைகளிலும், தேசிய பாதுகாப்பு முக்கியப் பிரச்னையாக உள்ளது. எல்லை மாநிலத்தில் இருக்கும் குஜராத் மக்கள், தேசிய பாதுகாப்பு குறித்து அதிக உணர்திறன் கொண்டவர்கள். நாட்டின் எந்த ஓர் இடத்திலும் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படுவதை குஜராத் மக்களால் ஏற்க முடியாது.

அரசு தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக, விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றன. விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் நீதித்துறையை அணுகலாம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நடுநிலையான நீதித்துறை இருக்கிறது. தேசவிரோத நடவடிக்கைகள், இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான பல தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்த பின்னர், மோடி அரசு பி.எஃப்.ஐ அமைப்பை தடைசெய்ய முடிவு செய்தது.
எந்தவொரு அமைப்பின் இத்தகைய செயல்பாடுகளும் மோடி அரசால் பொறுத்துக்கொள்ளப்படாது. குஜராத்தில் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவை அமைப்பதற்கான பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை, மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த, அதை முதலில் குஜராத்தில் செயல்படுத்தப்படும். அதற்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டு, அதன் செயல்பாட்டு வழிமுறைகள் பின்பு முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.