குற்றாலத்தில் செயற்கை அருவிகள்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், “நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன.

சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழி பாதையை மாற்றி இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உடன் நீர்வீழ்ச்சிகள் மாற்றம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் ரிசார்ட்ஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில்

சுற்றுலாத் துறை இயக்குனர் தலைமையில் நில நிர்வாக ஆணையர் , தலைமைக் வன காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

இதையடுத்து, ‘ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஐந்தே நாளில் குழு அமைத்த அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்த நீதிபதிகள், அதேசமயம் இயற்கை நீர்வீழ்ச்சி பாதையை, நீர் வழி பாதையை மாற்றும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது போன்ற ரிசார்ஸ்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை நாளை மாலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளைக்கு (டிசம்பர் 2) ஒத்தி வைத்தனர்.

தென்மேற்கு பருவமழை காலத்தில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுவது வழக்கம். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரையிலான சீசன் காலத்தில் குற்றால அருவிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டும். இதில் ஆனந்த குளியல் போட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி. வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குற்றாலத்துக்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.