பொம்மை முதலமைச்சரே இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் – வேலுமணி நடத்திய போராட்டத்தில் இபிஎஸ் பேச்சு

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை ஆகியவைகளை உயர்த்திய தமிழ்நாடு அரசை கண்டித்து, கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர், தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகின்றன. இந்த 18 மாத கால ஆட்சியில், கோவை மாவட்டத்தில் இருக்கிற மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. எந்த புதிய திட்டங்களையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. திமுக ஆட்சியால், கோவை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது. எந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை, அதனால் மக்கள் எந்தப் பயனும் பெறவில்லை.

ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது? ஒரு முதலமைச்சர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது? என்பதற்கு இந்த 18 மாத கால ஆட்சியே சான்று. இந்த ஆட்சியில் மக்கள் என்ன பலனைக் கண்டுவிட்டார்கள்? எங்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை பொம்மை முதலமைச்சர் பேசிவருகிறார். அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அதை மறந்து முதலமைச்சர் பேசிவருகிறார். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பாழாகிவிட்டதாகவும், நாசமாக்கிவிட்டதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டிவருகிறார்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சிதான் ஒரு பொற்கால ஆட்சி. ஏராளமான திட்டங்கள் அப்போது நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எனது தலைமையில், 4 வருடம் 2 மாத காலம் சிறப்பான ஆட்சி நடைபெற்றது. குடும்ப ஆட்சி நடத்துகிற முதலமைச்சருக்கு அதிமுக குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது, அருகதையும் கிடையாது. அதிமுகவை விமர்சனம் செய்வதற்கு ஒரு யோக்கியதை வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.