மணமேடையில் மாப்பிள்ளை கொடுத்த முத்தம்… திருமணம் நிறுத்தம் – பந்தயத்தால் சங்கடம்

உத்தரப் பிரதேசத்தின் சாம்பல் நகரில் கடந்த செவ்வாய்கிழமை (நவ. 29) அன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருமண அரங்கில் சுமார் 300 பேர் திருமணத்தை காண வந்திருந்த நிலையில், திருமண சடங்குகள் நடைபெற்று வந்தன. 

அப்போது, மணமேடையில் மணமகன் திடீரென மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், மணமேடையில் இருந்து வெளியேறியுள்ளது. தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளது. 

அதாவது, நண்பர்களிடம் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக, அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது தனக்கு சந்தேகம் எழுவதாகவும் மணப்பெண் தெரிவித்துள்ளார். 

மணமகன் தன்னுடைய அனுமதியில்லாமல், முறையற்ற வகையில் சீண்டியதாகவும், அதைதான் முதலில் கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். பின்னர், இருவீட்டாரையும் காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

இதுகுறித்து, 23 வயதான அந்த பெண் ஊடகங்களிடம் கூறுகையில்,”அவர் முத்தம் கொடுத்தபோது, எனக்கு அவமானமாக இருந்தது. எனது சுய மரியாதை குறித்து அவர் துளியும் கவலைப்படவில்லை. அனைவரின் முன்னிலையில் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்” என்றார். 

மேலும், இந்த பிரச்னையில் சமரசம் செய்துவைக்க போலீசார் முயன்ற நிலையில், அதை அந்த பெண் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், திருமணம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்து மணப்பெண்ணின் தாயார் கூறுகையில்,”மணமகனின் நண்பர்கள் அவரை தூண்டிவிட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எங்களை மகளை சமாதானம் செய்ய நாங்கள் முயன்றோம். ஆனால், அவரை எனது மகள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். எங்கள் பெண்ணுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க விரும்புகிறோம். இதுகுறித்து அவரே முடிவு எடுப்பார்” என்றார். 

சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், அவர்களுக்கு ஏறத்தாழ திருமணம் முடிந்துவிட்டதாகவும்,  ஓரீரு நாள்கள் விஷயத்தின் சூடு தணிந்த பின்னர் இதுகுறித்து அவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.