Gujarat Polls: 'மக்களை தவறாக வழிநடத்தும் காங்கிரஸ்' – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில், இரண்டு கட்டங்களாக, தேர்தல் நடக்கிறது. அதன்படி, 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டு கட்ட வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கன்க்ரேஜ் என்ற கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நர்மா நதி நீரை குஜராத் மாநிலத்தின் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. நலத் திட்டங்களை தாமதப்படுத்துவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே நம்பிக்கை காங்கிரஸ் வைத்துள்ளது.

சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்தினையும் காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட முயற்சி செய்தது. வழக்குகளின் மூலம் அந்த திட்டத்தினை காலம் தாழ்த்தியது. பனஸ்கந்தா மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுக்க நினைத்த காங்கிரசினை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும். வாக்கு செலுத்தும் போது இதை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மக்களுக்கு நலத் திட்டங்களை செய்வதில் காங்கிரசுக்கு ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்புகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும். எனது தலைமையிலான அரசு 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் 99 குடிநீர் சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பாஜக குஜராத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலமான குஜராத்தில், தொடர்ந்து 24 ஆண்டுகள், பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.