'என்ன வாழ்க்கைடா… லிப்டில் செல்லவே பயமாக உள்ளது' – ஆளுநர் தமிழிசை கிண்டல்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜெயகோபால் கரடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் CBSE-யின்  தென் மண்டலம் அளவிலான மாபெரும் சதுரங்க போட்டிகள் கடந்த நவ. 30ஆம் தேதி முதல் நேற்று (நவ. 2) வரை  நடைபெற்றது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட மாநில 658 பள்ளிகளை சேர்ந்த இதில் 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட 5,125 மாணவ மாணவியர்கள் இந்த மாபெரும் சதுரங்க போட்டி நிகழ்ச்சி கலந்து கொண்டு தங்கள் அதீத திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர்.

இந்த போட்டியில் ஒரு குழுவிற்கு 4 நபர்களாக, 5 முதல் 6 சுற்றுகள் வரை நடந்த போட்டிகளில் லீக் அடிப்படையில்  6 சுற்றுகளில் ஆண்கள் அணியும், 5 சுற்றுகளில் பெண்கள் அணியும் விளையாடினர். இதில் அதிக புள்ளிகளை பெற்ற ஒன்று முதல் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் ஆகியவற்றில் 11 வயது பிரிவில் தெலங்கானாவை சேர்ந்த சங்கமித்ரா பள்ளி அணி வென்றது. தொடர்ந்து, அம்பத்தூர், மதுரவாயில் சேர்ந்த வேலம்மாள் பள்ளியை சேர்ந்த அணிகள் உட்பட 14, 17, 19 வயதிற்குட்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒவ்வொரு வயது பிரிவிலும் 3 அணிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

அதில் முதலாம் மற்றும் இரண்டாம்  இடத்தில் மொத்தம் 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் CBSE சதுரங்க போட்டி குழுவினரால் தேசிய விளையாட்டுகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வெற்றி பெற்ற  குழுவினருக்கு மெரிட் சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றி பெற்ற பள்ளியின் அணிகளுக்கு வெற்றி கோப்பைகள் ஆகியவற்றை வழங்கினார். 

பின்னர், மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,”செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்கையும் முன்னேற வேண்டும் என்றால், சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், நாம் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால், பாதுகாப்பாக இருக்கிறோம். 

முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும், பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும், ஆனால் இப்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பு இல்லை. என்னடா வாழ்க்கை இது என எண்ண தோன்றுகிறது” என   சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”G20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைவரும் பெருமை பட வேண்டிய காரியம். இதன்மூலம் விவேகானந்தர் கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளர்” என புகழாரம் சூடியுள்ளர். 

இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரி கோயில் யானை லட்சுமி உயிரிழந்த விவகாரத்தில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் கூறுகையில்,”அனைத்திலும் அரசியல் செய்துவந்தவர் தற்போது யானையிலும் அரசியல் செய்கிறார் என்பதுதான் கவலையாக உள்ளது.

உங்களை, என்னை குறை கூறிவிட்டு தற்போது யானைக்கு வந்துவிட்டார். யானை இறந்தது அனைவருக்கும் மன வருத்தம்தான். இனி வரும் காலத்தில் கோயில் யானைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என தெரியவந்துள்ளது. 

யானை லட்சுமிக்கு ஏற்கெனவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. பின்னர் யானை இறந்தவுடன் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.