வேலூரில் இருந்து காட்பாடி அடுத்த குப்பிரெட்டி தாங்கள் வரை செல்லும் வழித்தடம் 10-B அரசு பேருந்து இன்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றுக்கொண்டு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் வரை சென்றுள்ளது. அப்பொழுது படியில் தொங்கியபடி 3 வாலிபர்கள் பயணம் செய்துள்ளனர், இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படியில் தொங்க வேண்டாம் உள்ளே செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனை அடுத்து வாலிபர்கள் படியில் தொங்கிய படியே கீழே இறங்கி கற்களை பேருந்தின் மீது எரிந்து உள்ளனர்.
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் அவர்களை கண்டித்தனர். மேலும் படியில் பயணம் செய்தால் பேருந்து எடுக்க மாட்டோம் என காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே சிறிது தூரம் சென்று பேருந்து நிறுத்தி விட்டனர். அப்பொழுது பொதுமக்களும் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் அந்த 3 வாலிபர்களையம் கண்டித்து பேருந்தின் உள்ளே செல்லும்படி அறிவுறுத்தினர். சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு பேருந்து அவ்விடத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பேருந்தில் படியில் பயணம் செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது. எனவே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.