டெஹ்ரான்:ஈரானில் ‘ஹிஜாப்’ அணிய எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, அந்த நாட்டின் கலாசார காவல் படைப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடைகட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
நடவடிக்கை
ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெண்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரானில் கலாசார காவல் படை என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. பெண்கள் முறையாக ஹிஜாப் அணிகின்றனரா என்பதை இவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இவர்களின் அடக்குமுறைக்கு இளைஞர்களும், இளம்பெண்களும் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. பல இடங்களில் ஹிஜாபை கழற்றி வீசியும், தீயிட்டு எரித்தும் பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சமீப காலமாக விளையாட்டு வீரர்களும் இந்த போராட்டத் தில் குதித்தனர்.
அறிவிப்பு
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வந்ததை அடுத்து, இஸ்லாமிய மத சட்டங்கள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும், ஹிஜாப் அணிவதை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட கலாசார காவல் படைப் பிரிவை கலைப்பதாக ஈரான் அரசு அறிவித்தது.
இது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டுப் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்