சென்னை: சென்னையில் குப்பை கிடங்குகளில் குப்பை குவிப்பதை தடுக்க ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது.
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 36 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வருவதால் 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகையான குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பையை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் என்ற பயோ மைனிங் முறையில், 350.65 கோடி ரூபாய் செலவில் அகற்றி, நிலத்தை மாநகராட்சி மீட்டு வருகிறது. இதில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
இதைதொடர்ந்து, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட உள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவியல் மலைபோல் காணப்படுகின்றன. இந்தக் குப்பை குவியலை 640.83 கோடி ரூபாய் மதிப்பில் பயோ மைனிங் முறையில் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பெருங்குடி குப்பைக் கிடங்கில் 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும், 2023-க்குள் அப்பணிகள் முடிக்கப்பட்டு, அந்த நிலபரப்பு மீட்கப்படும். தற்போது, கொடுங்கையூர் குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் மீட்கப்பட்டப் பின், மீண்டும் குப்பைக் குவியலாக மாறாமல் இருக்கவும், மாநகரின் மற்ற இடங்களில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படுவதை தடுக்கவும், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப்படும். அதன்படி, கொடுங்கையூர் குப்பை வளாகத்தில், மக்கும், மக்காத குப்பை, மறுசுழற்சி செய்யக்கூடியவை, பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தல் போன்றவற்றிற்கான ஆலைகள் அமைக்கப்பட்டு, மாநகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை குவிக்கப்படாமல் அகற்றப்படும்” என்று அவர் கூறினார்.
