அதிரடி…பெரு அதிபர் கைது… முதல் பெண் அதிபர் பொறுப்பேற்பு!

பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டு, அந்நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்றார்.

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார்.

அவர் மீது அண்மை காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. ஆனால் அவை தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என கூறி அவர் நிராகரித்தார். இந்நிலையில், அவசர நிலையை பிரகடணப்படுத்திய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் தொலைகாட்சி முன் தோன்றி பொதுமக்களிடம் பேசினார்.

நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அதிபர் பெட்ரோ தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கிற வகையில் அங்கு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த முடிவை எதிர்த்து அமைச்சர் பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நடவடிக்கை மூலம் அவர் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடங்கி உள்ளதாக அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் குற்றம் சாட்டியது. அவர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக ‘இம்பீச்மெண்ட்’ நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். ‘இம்பீச்மெண்ட்’ நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பொறுப்பு ஏற்றார்.

60 வயதான டினா, 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப்போவதாக தெரிவித்தார். அப்போதுதான் முந்தைய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவிக்காலம் முடிய இருந்தது. பதவி ஏற்ற பின்னர் அதிபர் டினா பேசும்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அரசியல் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். பெருநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.