கவுதமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

1987ம் ஆண்டு காந்திநகர் ரெண்டவா வீதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கவுதமி. ரஜினி, பிரபு நடித்த குரு சிஷ்யன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஏராளமான சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது துப்பறிவாளன் 2, மற்றும் சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் கவுதமி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அவர் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இது தவிர புற்றுநோயில் இருந்து போராடி மீண்ட அவர் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கவுதமி மலேசியாவில் உள்ள, ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

கவுதமி கூறும்போது, “மலேசியாவின் ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் எனது பணியைத் தொடரவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஒரு அற்புதமான உந்துதலாக இருக்கிறது. எனது பயணத்தில் தங்கள் அன்புடனும் ஆதரவுடனும் இணைந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.