சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் influencer சொல்வதைக் கேட்டு சருமப் பராமரிப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
நாகரிகம் மிக்க இக்காலத்தில், அழகு சாதனப் பொருள்களின் தேவை மிக இன்றியமையாதது. இன்றைய டிஜிட்டல் யுகத்தின் உதவியால் அழகு சாதனத்துறையானது இன்னும் வலுபெற்றுள்ளது. அதே நேரம், சமூக வலைதளங்களில் அழகுக்கலை குறிப்பாக சருமப் பராமரிப்பு தொடர்பான பல தவறான தகவல்களால் மக்கள் வழி நடத்தப்படுவதாக, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
சருமப் பராமரிப்பு நடைமுறையாகட்டும், ரெட்டினாய்டுகள் மற்றும் மருந்து போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதாகட்டும் முதலில் மக்கள் தங்களுக்கு என்ன வகையான சருமப் பிரச்னை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சரும நல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டுமென்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புதுடெல்லியில் உள்ள ஸ்கின் கியூர் கிளினிக்கின் (SkinQure Clinic) சரும மருத்துவர் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பி.எல். ஜாங்கிட் கருத்துப்படி, “சருமப் பராமரிப்பில் முதலில் சருமத்தின் வகையைப் புரிந்து கொள்வதே முதன்மையானதாக இருக்க வேண்டும். மோசமான சருமப் பிரச்னை என்பது, சிறுநீரக பிரச்னை அல்லது கல்லீரல் பிரச்னைகளுக்குச் சமம்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், இன்ஃப்ளூயன்சர் ஆக உள்ளவர்களின் சரும ஆலோசனைகளைப் பின்பற்றுவது தவறானது. இது தவிர்க்கப்பட வேண்டும். மக்கள் திரையில் பார்க்கும் நபர் பயன்படுத்தும் அதே தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதற்கு பதிலாக அவர்கள், தகுந்த வழிகாட்டும் மற்றும் மருந்துகளை வழங்கக்கூடிய சரும நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
உடலின் மிகப்பெரிய உறுப்பான சருமம், ஒரு நபரின் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். “ரெட்டினாய்டுகள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன. மக்கள் அவற்றை வாங்குகிறார்கள். சமூக வலைதளங்களில் பல வீடியோக்களைப் பார்த்து, தங்கள் சருமத்திற்குப் பொருந்தாத பொருள்களை வாங்குகிறார்கள். இவற்றைப் பயன்படுத்தும் முன்பு, சருமநல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்” என்று கூறும் டாக்டர் ஜாங்கிட், “ஒருவரின் சருமம் எப்போதும் சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்படலாம், அதனால் எந்தவோர் அழகுசாதன தயாரிப்பு அல்லது மூலப்பொருளும், குறிப்பிட்ட சரும வகைக்குப் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, சருமப் பராமரிப்பை கவனமாகவும் துல்லியமாகவும் கையாள வேண்டும். வறண்ட மற்றும் கரடுமுரடான சருமம் உள்ளவர்கள் அரிப்பு மற்றும் எரிச்சலை உணர்வார்கள். ரெட்டினாய்டுகள் உங்கள் சருமத்தை சொரசொரப்பாக்கும். அத்துடன் கிளைகாலிக் அமிலம் போன்ற பிற ரசாயனக் கரைசல்களைப் பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்பு அதிகமாகும்” என்றார் அவர்.

இன்று கிராமப்புறங்களில்கூட மக்கள் தங்களது சருமத்திற்கு ஸ்டீராய்டுகளுடன் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். “ஸ்டீராய்டுகள் மிகவும் மலிவானவை. குறைந்த விலையில் 10 ரூபாய்க்கு வாங்க முடிகிறது. ஆனால், அவை நோயின் அறிகுறிகளை மட்டுமே குறைக்கும், உண்மையான நோயை அல்ல. எனவே அவை தவிர்க்கப்பட வேண்டும்” எனவும் டாக்டர் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் விரும்பும் ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். தினமும் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்தி, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமப் பராமரிப்பை எளிமையாக வைத்திருங்கள். பளபளப்பான சருமத்திற்கு பதிலாக ஆரோக்கியமான சருமத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள். சரும ஆரோக்கியத்தைப் பரமாரிக்க, வருடத்திற்கு 2-3 முறை சரும மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்கிறார் டாக்டர் ஜாங்கிட்.