கூகுளிடம் இழப்பீடு கேட்டு இளைஞர் பொதுநல வழக்கு: ரூ.25,000 அபராதம் விதித்து எச்சரித்த உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கூகுள் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வேடிக்கையாக பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை எச்சரித்த நீதிமன்றம், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “யூடியூப் சேனல்களில் படிப்பதற்கான தரவுகளை நாடும்போது அதன் ஊடே வரும் விளம்பரங்களால் கவனச் சிதறல் ஏற்பட்டு என்னால் போட்டித் தேர்வில் வெற்றி பெற இயலாமல் போனது. இதனால், எனக்கு யூடியூப்பை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் இழப்பீடு தருமாறு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவும், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இது அடாவடித்தனமான மனு. பொதுநல வழக்குகளின் மாண்பினை ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் வகையில் இந்த மனு உள்ளது. மனுதாரருக்கு எந்த விளம்பரம் பிடிக்கவில்லையோ அதனைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். உங்களை ஏதேனும் ஒரு விளம்பரம் திசைதிருப்புகிறது என்றால் அதை நீங்கள் தான் தவிர்க்க வேண்டும். மாறாக, இதுபோன்று பொதுநல வழக்கைத் தொடர்வது நீதிமன்ற நேரத்தினை வீணடிக்கும் செயலாகும். இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு ரூ.25 ஆயிரம் அபராதத்தை அவர் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் செலுத்துமாறு உத்தரவிடுகிறோம்” என்று தெரிவித்தனர்.

முன்னதாக, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அந்த இளைஞர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். அதன்பிறகே அவருக்கு அபராதத்தை ரூ.25,000 ஆக குறைத்ததோடு, அவர் வீடு செல்லவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.