மாண்டஸ் புயல்: விழுப்புரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்… போனில் உரையாடிய முதலமைச்சர்!

மாண்டஸ் புயல், புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே நேற்று இரவு கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்த நிலையில்… மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலையில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் சின்னத்தின் காரணமாக நேற்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருந்தது. மாண்டஸ் புயல், கரையை நெருங்க நெருங்க விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் அருகேயுள்ள 19 மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. பலத்த காற்றுடன், சுமார் 10 அடிக்கும் மேல் கடல் அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன. 

பிள்ளைச்சாவடியில் ஆர்ப்பரித்த கடல்

இந்நிலையில், பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடற்கரை ஒட்டியிருந்த சுமார் 5 வீடுகளும், பல தென்னை மரங்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, பிள்ளைச்சாவடி, மரக்காணம், முதலியார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், எஸ்.பி ஸ்ரீநாதாவுடன் சென்று புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தினுள், புயலால் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும், புயல் சின்னம் மற்றும் மழையின் தன்மையை கருத்தில் கொண்டு இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மீட்புக்குழுவினர்

மாண்டஸ் புயல், நேற்று நள்ளிரவு சமயத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சென்னை – புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் (இ.சி.ஆர்) அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இதர போக்குவரத்துகள் நேற்று இரவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. விழுப்புரம், புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர் வழியாக சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, மாற்றுவழி பாதையில் திருப்பி விடப்பட்டன. 

மேலும், மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை நீடித்தது. மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பொழிந்து வருவதையொட்டி, நேற்று இரவு சென்னையிலுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது, ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் கள நிலவரங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.

ஸ்டாலின், முகாம்களில் பொதுமக்கள்

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம், முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து தொலைப்பேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு 9 மணி நிலவரப்படி… வானூர், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம் ஆகிய வட்டங்களில்  அமைக்கப்பட்டுள்ள 49 நிவாரண முகாம்களில், 861 குடும்பங்களை சேர்ந்த 2,498 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.