எதிர்க்கட்சி தலைவர்கள் கைது வங்கதேச அரசு நடவடிக்கை| Dinamalar

டாக்கா: வங்கதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவர், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவராக கலீதா ஜியா உள்ளார். இவர், மூன்று முறை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். கடந்த ௨௦௧௮ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியினர், ‘ஆளும் கட்சியினர் தேர்தல்களில் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே ௨௦௨௪ல் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, தேர்தலை சந்திக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று நாடு முழுதும் மிகப்பெரும் போராட்டம், ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, பங்களாதேஷ் தேசியவாத கட்சியினர் ௨,௦௦௦ பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை எதிர்க்கட்சியின் பொதுச் செயலரான மிர்ஸா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் மற்றும் கட்சியின் நிலைக் குழு உறுப்பினர் மிர்ஸா அப்பாஸ் ஆகிய இரு முக்கிய தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீது உள்ள வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.