கடல் நீர் புகும் அபாயம்: கடற்கரை கிராமத்தில் மேயர் ஆய்வு

கடலூர்: மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூர் கடற்கரை கிராமங்களில் வழக்கத்தை விட கடல் அலைகள் ஐந்து முதல் ஆறு அடி உயரம் வரை சீறிப்பாய்ந்தது. இந்நிலையில் கடலூர் அடுத்த கடற்கரை கிராமங்களான தாழங்குடா மற்றும் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சோனங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை, மீனவர்கள் அவசரம் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.  

இந்நிலையில், நேற்று சோனங்குப்பம் கிராமத்திற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், தற்போது கடல் நீர் கிராம கரையோர பகுதி வரை புகுந்துள்ளது. கற்கள் கொட்டி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி பணிகள் துரிதப்படுத்தப்படும். பாதுகாப்பான இடங்களில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

மாநகர திமுக செயலாளர் ராஜா, மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, மாமன்ற உறுப்பினர் பாலச்சந்தர் மற்றும் முதுநகர் செந்தில், மாணவர் அணி பாலாஜி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். முன்னதாக, பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காகவும் அவர்களுக்கு உணவு வழங்குவதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலூர் அம்மா உணவகங்களில் சுமார் 5000 பேருக்கு உணவு தயாரிக்கும் பணியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையர் நவேந்திரன், துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.