பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் எண்ணத்திலும், நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் நோக்கத்திலும் தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியின் மூலம் பொதுமக்களும் புத்தகப் பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். மேலும் எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை புத்தக கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 46வது புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.