இடாநகர்: சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்ற அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒட்டுமொத்த அருணாச்சல பிரதேசத்தையும் கண்காணிக்க முடியும்.
அதோடு சீனா, பூடான் எல்லையில் தவாங் அமைந்திருக்கிறது. இங்கிருந்து ஒட்டுமொத்த திபெத்தையும் கண்காணிக்க முடியும். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தவாங் பகுதியில் தங்கி சென்றுள்ளார். அங்கு பிரம்மாண்ட புத்த மடாலயமும் அமைந்துள்ளது. இது சீனாவுக்கு கவுரவ பிரச்சினையாக உள்ளது.
மேலும் அமெரிக்காவின் நயாகராவுக்கு இணையான நீர்வீழ்ச்சிகள் தவாங்கில் அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 108 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இவை புனித நீர்வீழ்ச்சிகள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து அப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
43% பகுதி ஆக்கிரமிக்கப்பட்டவை: இதன் காரணமாகவே தவாங் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய சீன ராணுவம் முயற்சி செய்கிறது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யா, கனடாவுக்கு அடுத்த உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. ஆனால் அதன் 43% பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டவை.
2-ம் உலகப் போருக்குப் பிறகு கடந்த 1947-ல் “உள் மங்கோலியாவை” சீன ராணுவம் ஆக்கிரமித்தது. கடந்த 1949-ல் உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த கிழக்கு துர்கிஸ்தான் பகுதியை ஆக்கிரமித்தது. இதனை ஜின்ஜியாங் என்று சீனா பெயரிட்டு அப்பகுதியில் சீனர்களை அதிக அளவில் குடியேற்றி உள்ளது.
கடந்த 1950-ம் ஆண்டு மே மாதம் திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்தது. போரில் பிரிட்டனிடம் இழந்த ஹாங்காங்கை சீன அரசு மீட்டுள்ளது. அந்த வகையில் சீனாவின் நிலப்பரப்பில் சுமார் 43% பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டவை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தைவானை ஆக்கிரமிக்க சீனா தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதோடு திரைமறைவில் இந்தியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமிக்க அந்த நாடு முயற்சி செய்கிறது. அதோடு தென் சீனக் கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்கிறது.