சென்னை: வேளாண் துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை சென்னையில் நேற்று வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பின்னர் கூறியதாவது: விளைபொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 510 சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 3.75 லட்சம் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம். கடந்த நவம்பர் வரை 17.66 லட்சம் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
பொருளீட்டுக் கடனாக விவசாயிகளுக்கு ரூ.13.38 கோடியும், வணிகர்களுக்கு ரூ.2.84 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 63 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “மேன்டூஸ் புயலால் திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வயல்களில் தண்ணீர் வடிந்தபின் கணக்கெடுப்பு நடத்தி, 33 சதவீதத்துக்கு மேல் பயிர் பாதித்தவர்களுக்கு முதல்வரின் ஆலோசனை பெற்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில், துறை செயலர் சி.சமயமூர்த்தி, வணிகத் துறை இயக்குநர் ச.நடராஜன், வேளாண் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.