சட்டசபையில் நகைச்சுவை நடிகரை உருவ கேலி செய்தாரா கேரளா அமைச்சர்?

மலையாள திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் இந்திரன்ஸ். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் கல்லூரி முதல்வரான சத்யராஜுக்கு உதவியாளராக நடித்திருந்தார். சில ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கேரள சட்டசபையில் அமைச்சர் வாசவன் என்பவர், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் விதமாக பேசும்போது, “முன்பு காங்கிரஸ் கட்சி அமிதாப்பச்சன் போல இருந்தது. இப்போது நம்ம ஊர் நடிகர் இந்திரன்ஸ் போல ஆகிவிட்டது” என்று பேசி இருந்தார். இதையடுத்து இந்திரன்ஸ் உயரம் குறைவாக இருப்பதை குறிப்பிட்டு அவரை உருவகேலி செய்துவிட்டார் என ஒரு பரபரப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, தான் அவ்வாறான எந்த ஒரு நோக்கத்திலும் அப்படி கூறவில்லை என அமைச்சர் கூறியதை தொடர்ந்து அந்த வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அதேசமயம் இப்படி தன்னுடைய பெயர் சட்டசபையில் அடிபட்டது குறித்து நடிகர் இந்திரன்ஸிடம் கூறும்போது, “ஒவ்வொருத்தருக்கும் அவர்களது கருத்தை அவர்கள் சொல்ல விரும்பும் விதமாக கூறுவதற்கு உரிமை உண்டு. இதில் என்னை அவர் சிறுமைப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் நான் அமிதாப்பச்சனை போல உயரமானவன் அல்ல.. என்னுடைய உயரத்திற்கு அவரால் பொருந்திப் போக முடியாது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.