புதுடெல்லி: இந்தியாவில் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் வருமாறு: ஒன்றிய அரசின் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி எனும் திட்டத்தின் விவரம் மற்றும் அதனுடைய தற்போதைய நிலை என்ன எனவும், அப்பணிகள் எத்தனை கட்டமாக நடைபெறுகிறது என்னும் விவரங்களையும் மாநிலங்கள் வாரியாக தெரியப்படுத்தவும். ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அதற்கேற்ப வாகனங்களை தகவமைத்து அதன் உற்பத்தியை விரிவுப்படுத்தவதிலும் உள்ள சவால்கள் என்ன?
மின்வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறதா எனவும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும். மாநில அரசுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு, நிதியுதவி வழங்க ஒன்றிய அரசு முன்மொழிகிறதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும். பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுகின்ற தனியார் பேருந்துகள், கார்கள் மற்றும் ரிக் ஷா போன்ற வாகனங்களை மின் வாகனமாக மாற்றுவதற்கும் அதன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறதா எனவும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும். நாடெங்கிலும் புதிய மின்வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான உட்கட்டமைப்புகள் அமைப்பதை ஊக்குவிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை என்ன எனவும், நாட்டில் தற்போது உள்ள மின் வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு எனவும் மாநிலங்கள் வாரியாக தெரியப்படுத்தவும் எனவும் கேள்வி எழுப்பினார்.