திருவனந்தபுரம்: முகம்மது நிஜாம் (45) கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர். 2015-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி இவர் தன்னுடைய வீட்டுக்குக் காரில் திரும்பி உள்ளார். அப்போது அந்தக்குடியிருப்பின் காவலாளி சந்திர போஸ் (51) கதவைத் திறப்பதற்கு சற்று தாமதமாகி உள்ளது.
இதனால் கோபமடைந்த நிஜாம், அந்தக் காவலாளியை தாக்கச் சென்றுள்ளார். நிஜாமின் தாக்குதலிருந்து தப்பிப்பதற்காக காவலாளி ஓடி உள்ளார். அவரைக் காரில் துரத்திய நிஜாம், காரை காவலாளி மீது ஏற்றி சுவரோடு சேர்த்து நசுக்கி உள்ளார்.
பலத்த காயமடைந்த காவலாளி சந்திர போஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் மூன்று வாரங்கள் கழித்து இறந்தார்.
இந்தச் சம்பவம் கேரளாவில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
கேரள காவல்துறை முகம்மது நிஜாமை கைது செய்து சிறையில் அடைத்தது. 2016-ம் ஆண்டு திருச்சூர் மாவட்ட நீதிமன்றம் முகம்மது நிஜாமுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.70 லட்சம் அபராதமும் விதித்தது. இதில் ரூ.50 லட்சத்தை காவலாளியின் மனைவிக்கு வழங்க உத்தரவிட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளாக முகம்மது நிஜாம் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேரளா மாநில அரசு கோரியது.
அந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. நிஜாமுக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையே போதுமானது என்று உயர்நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாட முடி வெடுத்துள்ளது.
புகையிலை தொழிலில் ஈடுபட்டுவந்த நிஜாமின் சொத்து மதிப்பு 2015-ல் ரூ.5,000 கோடியாக இருந்தது. இந்தப் பண பலத்தால், சட்டமீறலில் ஈடுபட்டுவந்த அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருந்தன. ஒருமுறை நிஜாம் மதுபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.
இதை அறிந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் நிஜாம் மீது வழக்குப் பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நிஜாம், அந்தப் பெண் காவலரை தன் காரில் இழுத்து அடைத்து வைத்துள்ளார்.
தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்பது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.