ராமநாதபுரம்: மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 2 டன் கடல் அட்டை படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை தென் கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்த கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று மாலை வேதாளை கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை சோதனை நடத்தினர்.
அப்போது, பெரிய நாட்டுப்படகில் மூட்டைகளில் பதப்படுத்திய நிலையில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் 100 கிலோ வீதம் 20 சாக்கு மூட்டைகளில் 2 டன் கடல் அட்டைகள் இருந்தன. இரவு நேரத்தில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிய ந்தது. சம்பவ இடத்திற்கு வந்து எஸ்பி தங்கதுரை விசாரணை செய்தார். படகை பறிமுதல் செய்த தனிபிரிவினர், அதன் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.