சில தினங்களுக்கு முன்பு, விஜய் மக்கள் இயக்கத்தினரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு பிரியாணி விருந்தும் வைத்து குஷிப்படுத்தினார் விஜய். அந்த சந்திப்பில்தான் மாற்றுத்திறனாளி பிரபாகரன் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. இந்த நிலையில், பிரபாகரனிடம் பேசினோம், விஜய்யை சந்தித்த ஆச்சர்யத்திலிருந்து விலகாதவராய் பேசுகிறார்.

“என்னோட சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம் சிதண்டி கிராமம். அப்பா, அம்மா விவசாயக் கூலிகள். வீட்டில் நான்தான் மூத்த பையன். எனக்கு அடுத்து தங்கச்சி இருக்கா. அவளுக்கு திருமணமாகிவிட்டது. நான் லேப் டெக்னீஷியன் படிப்பு படித்திருந்தாலும், எந்த வேலையும் கிடைக்கல. 30 வயசாகுது, திருமணமும் கைகூடல. இதுக்கெல்லாம் தடையா இருப்பது, எனது கால்கள்தான். 13 வயதுவரை மற்ற பசங்க மாதிரி நல்லா ஓடியாடி விளையாடிக்கிட்டிருந்தேன். திடீர்னு ரெண்டு கால் தொடைங்களும் சுருங்க ஆரம்பிச்சிடுச்சி. நடந்தாலும் அப்படியே விழுந்துடுவேன். டாக்டருங்கக்கிட்டப் போய் காண்பிச்சப்போ, ‘இது தசை சம்மந்தப்பட்ட நோய். சரிப்பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டாங்க.
அதிலிருந்து, இப்படியேதான் இருக்கேன். எங்கயாவது போறதுன்னா வீல் சேர்லதான் போவேன். யாருடைய துணையாவது தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும். அப்பா, அம்மாதான் என்னை அவ்ளோ கஷ்டத்திலும் பார்த்துக்கிறாங்க. ஊருலயே முடங்கிக் கிடக்குற எனக்கு ஒரே ஆறுதல் தளபதியும் அவரது படங்களும்தான். சின்ன வயசிலிருந்தே நான் தளபதி ஃபேன். என்னால நடக்கமுடியாது. ஆனா, தளபதியோட டான்ஸைப் பார்த்து சந்தோஷபட்டுக்குவேன்.

தளபதியை நேரில் பார்க்கிறதெல்லாம் பெரிய விஷயம். அவர் என்னை தூக்கியடி புகைப்படம் எடுத்துகிட்டது விவரிக்கமுடியாத சந்தோஷம். என்னோட வாழ்க்கையில் அதிசயம் நடந்தமாதிரிதான் இருக்கு. தளபதியை பார்க்கணும்னு நான் அடிக்கடி எல்லோர்கிட்டயும் சொல்லிக்கிட்டே இருப்பேன்.
அன்னைக்கு செங்கல்பட்டு மாவட்ட ரசிகர்களையும் தளபதி சந்திக்கிறார்னு சொன்னாங்க. என் விருப்பத்தை இயக்கத்தின் நிர்வாகிகள்கிட்ட சொன்னப்போ, என்னையும் கூட்டிட்டு போனாங்க. தளபதி கூட எல்லோரும் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. போட்டோ எடுக்கும்போது, படிக்கட்டுல வீல் சேரை ஏத்திக்கிட்டு போகமுடியலை. அதனால, என்னை தளபதிகூட போட்டோ எடுத்துக்க படிக்கட்டுல தூக்கிட்டுப் போனாங்க. அவங்க தூக்கிட்டு வர்றதைப் பார்த்த தளபதி ஓடிவந்து, அப்படியே என்னைத் தூக்கிக்கிட்டார். அதோட, ‘எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருக்கா? அப்படி இருந்தா கட்டாயம் சொல்லுங்க. ஹெல்ப் பண்றேன்’ன்னும் சொன்னார்.
தளபதி என்னை தூக்கினதால எங்க ஊரில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். வந்து வந்து பேசுறாங்க. அஜித் ஃபேன்ஸ்கூட சந்தோஷமா வந்து பேசி வாழ்த்திட்டுப் போறாங்க. என்னை தளபதி பேமஸ் ஆக்கிட்டாரு. தளபதிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை” என மகிழ்ச்சியுடன் பேசுகிறார் பிரபாகரன்.