டெல்லி: இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்த ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி; பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான கட்டுப்பாடு முறையை 2010 மற்றும் 2014ல் நீக்கப்பட்டதாக கூறினார். நவம்பர் 2021ம் மற்றும் மே 22ல் ஒன்றிய அரசு எரிபொருளுக்கான காலால் வரியை 2 முறை குறைத்திருப்பதாக கூறிய அவர், முந்தையை காலக்கட்டத்தை ஒப்பிட்டால் கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைந்த அளவே உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறினார். எரிபொருள் விலையை கட்டுப்படுத்த மதிப்புக்கூட்டு வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.
நாட்டில் பெட்ரோல் விலை மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரந்ததற்கு ஈடாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் உலக நாடுகள் பலவும், 40 முதல் 50% அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்தியதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் 2% மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டதாக கூறினார். இந்த சூழலில் இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஒன்றிய அமைச்சரின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில், இருந்து வெளிநடப்பு செய்தனர்.