புதுச்சேரியில் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூடக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணி அரசின் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ மற்றும் எதிர்கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோயில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபானக் கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மதுக்கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று மதுக்கடையை மூடக் கோரி, புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மதுக்கடை திறக்க எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உழவர்கரை தொகுதி ஆளும் கூட்டணி அரசின் பாஜக ஆதரவு சுயேட்சை எமஎல்ஏ சிவசங்கரனும் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் பங்கேற்று மதுக்கடையை மூடக் கோரி அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதேபோல், பொதுமக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சினரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக சிவசங்கரன் எம்எல்ஏ கூறும்போது: “குடியிருப்பு, பள்ளி, கோயில்கள் அமைந்துள்ள இப்பகுதியில் திறக்கப்பட்டள்ள மதுக்கடையை அரசு உடனே அகற்ற வேண்டும். மதுக்கடைக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு எப்போழுதும் எனது முழு ஆதரவும் இருக்கும்” என்று சிவசங்கரன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.