சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க சார்பில் திறந்தவெளி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஊழியர் சங்க பிரதி நதிகளுடன் சங்கத் தலைவர் வெங்கடேசன் விவாதித்தார். அந்த கூட்டத்தில் எந்த விலை கொடுத்தேனும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வெற்றியை தருவோம் என அவர் பேசியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் “தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. அதை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு விரைவாக வழங்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறினாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியாக நடக்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் அதற்கு முரணாக நிதியமைச்சர் தியாகராஜன் பேசி வருகிறார். அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எந்த விலை கொடுத்தேனும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெற்றே தீருவோம். தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி அதிகாரித்து காணப்படுகிறது. தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றினால் வசதியாக இருக்கும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் கோரிக்கை வைத்துள்ளார்.