அவதார் 2 ரிலீஸ் : அடம்பிடித்த டிஸ்னி… புறக்கணித்த திரையரங்குகள் – நிலவரம் என்ன?

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அவதார் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. 

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ள அவதார் திரைப்படத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் பிரச்சனை எழுந்தது. அதாவது அவதார் படத்தின் விநியோகிஸ்தர்களுடனான (Disney Studios) ஒப்பந்ததில் உடன்பாடு எட்டப்படாததால், சென்னையில் பல்வேறு திரையரங்குகள் அவதார் படத்தை திரையிட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அதிகாலை 4 மணி முதல் தமிழ்நாட்டில் அவதார் 2 திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையின் பிரபல திரையரங்குகளான வெற்றி தியோட்டர், ஜிகே சினிமாஸ், ஏஜிஎஸ் சினிமாஸ் உள்ளிட்டவை படத்தின் அதிகாலை காட்சியை திரையிடவில்லை. இவை அனைத்தும், அவதார் 2 படத்தை திரையிடும் என கூறியிருந்தன. 

தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியனின், ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கிலும் அவதார் 2 படம் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரச்னைகள் தீர்க்கப்பட்டதாக கூறி, ஏஜிஎஸ் சினிமாஸ் மட்டும் அவதார் 2 படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது. 

இருப்பினும், ஏஜிஎஸ் தவிர்த்து மேற்குறிப்பிட்ட மற்ற திரையரங்குகள் அவதார் படத்தை வெளியிடவில்லை. மேலும், இதுகுறித்து, சென்னை போரூர் ஜிகே சினிமாஸ், நிர்வாக இயக்குநர் ரூபன் மதிவாணன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இந்த படத்தை (அவதார் 2) திரையிடுவதற்கு செய்த முதலீடுகள் மற்றும் அப்கிரேட்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. சில தியேட்டர் உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள். 

சில மாற்றப்பட்ட ப்ரொஜெக்டர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் என்பதை நான் அறிவேன்” என அவதார் 2 படத்தை வெளியிடாததால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார். 

அவதார் 2 படத்தை திரையரங்கில் விநியோகம் செய்யும் டிஸ்னி ஸ்டூடியோஸ், 70 சதவீதம் பங்கேட்டதாக கூறப்படுகிறது. அதில் உடன்பாடு இல்லை என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் படம் ரிலீஸிற்கு முன்பே போர்க்கொடி தூக்கி வந்தனர். அவதார் 2 படம் வெளியாவதால், புதிய தமிழ் படங்கள் ஏதும் இன்று வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.