திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பூவிருந்தவல்லியில் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் செத்துவரி உயர்வு, மின் கட்டணம்  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் பூந்தமல்லி குமணஞ்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பூந்தமல்லி அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய பென்ஜமின், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் சொத்து வரி ஏற்றப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, சொத்துவரி அதிகமாக ஏற்றப்பட்டிருக்கிறது.

தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் முதியோர் உதவி திட்டத்தை முடக்கி திமுக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றும், பூந்தமல்லி நகரத்தில் தண்ணீர் தேங்காத காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் காலத்தில் கட்டப்பட்ட கால்வாய்கள் தான் காரணம் என்றும் தெரிவித்தார். 

மேலும், மாதா மாதம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என பொய் வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார். இறுதியாக ‘அடிக்கடி மின்தடைக்கு காரணம் கேட்டால் அணில் கதை’ என அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.