'ஓசி-னா போயிட்டு போயிட்டு வருவியா…' இலவச பேருந்தில் சென்ற மூதாட்டியை திட்டிய நடத்துநர்!

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்த அரசு பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்பதை உடனடியாக நிறைவேற்றியது. உள்ளூர் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே, பள்ளி மாணவிகளுக்கு பஸ் பாஸ் வசதி இருக்கும் நிலையில், தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் இருந்து, வேலைக்கு செல்லும் பெண்கள் வரை இத்திட்டம் பயனளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு வேலையிலும், கல்வியிலும் எந்த தடையையும் இருக்கக்கூடாது என்பது இத்திட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றாகும். 

ஆனால், தொடர்ந்து இந்த திட்டம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. அநாவசியமாக பெண்கள் இதில் பயணிக்கிறார்கள், குறைந்த தூரத்திற்கு கூட பேருந்தில்தான் செல்கிறார்கள் போன்ற கருத்துகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால், இவை அனைத்தும் சப்பைக்கட்டுகள் என்று அரசு புறந்தள்ளியது. கட்டணமில்லா சேவைக்கு என்பதை குறிப்பிட மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டன. மேலும், பெண்கள் எளிதாக கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காண பேருந்துகளுக்கு பின்க் நிற பெயிண்டும் அடிக்கப்பட்டது.  

அந்த வகையில், தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடந்துனர், “காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா” என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார். 

வைரலாகும் வீடியோ

இதற்கு அந்த மூதாட்டி,”காசு ஓசி என்று நான் போகவில்லை. ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறாய். நான் மாலை போட்டு உள்ளேன், ஏன் கோபமா பேசுகிறாய்” என பரிதாபமாக கேட்கிறார். இந்த காட்சிகளை அங்கு இருந்த சகப் பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோதான் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்த காட்சிகள் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், மானங்கோரையை சேர்ந்த நடத்துனர் ரமேஷ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.