ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமின் வாசல் அருகே வெள்ளிக்கிழமை காலையில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி ராணுவ முகாம் அருகே பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவ முகாமின் காவலாளி அடையாளம் தெரியாமல் தவறுதலாக சுட்டதில் அவர்கள் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனை மறுத்துள்ள ராணுவம், அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் கொல்லப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பால்யன் பகுதியில் வசித்து வந்த ஷாலிந்தர் குமார், கமல் கிஷோர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ராணுவத்தில் சுமை தூக்கும் வேலை செய்துவந்ததாகவும், காயமடைந்தவர் பொதுஜனம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் போராட்டம் குறித்து ரஜோரி காவல் கண்காணிப்பாளர் சவுத்ரி முகம்மது அஸ்லாம் கூறுகையில் “உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். ரஜோரி காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு நடந்த ராணுவ முகாம் அருகே அதிக அளவிலான பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ராணுவ முகாம் மீது கல்லெறிந்துள்ளனர்” என்றார்
சம்பவம் குறித்து ராணுவம் தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்படாத நிலையில், இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலையில் ரஜோரி அருகே உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ராணுவ முகாம் அருகே காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் குவிந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
In an early morning firing incident by unidentified terrorists at Rajauri near Military Hospital, there has been fatal casualty of two individuals. The Police, security forces and civil administration officials are on the site.@NorthernComd_IA