வாரிசு பார்க்க துணிவு வேண்டும் – பார்த்திபனின் அசத்தல் பேச்சு

அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் விஜய்தான் அஜித்தைவிட பெரிய ஸ்டார் என வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு பேசியிருப்பது மேற்கொண்டு பிரச்னையை வளர்த்திருக்கிறது. இதனால் வரவிருக்கும் பொங்கல் இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் ஒதுக்கக் கூடாது. உதயநிதி ஸ்டாலினுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அவரை சந்திக்கும்போது அடிக்கடி இதைச் சொல்கிறேன். உங்க தாத்தா கிட்ட இருக்கிற திறமைகளில் ஒரு பகுதி உங்களிடம் இருக்கிறது. சிரித்துக் கொண்டு நன்றாக கையாள்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறேன். 

நேற்றுகூட அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறேன். அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை வளர வாழ்த்துகள். ஒருவர் உயர்ந்த பதவிக்கு போகும்போது, எம்ஜிஆர் கூட அந்தப் பதவிக்கு போகும்போது நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்தப் பதவி சின்ன வயதிலேயே உதயநிதிக்கு கிடைத்துவிட்டதால் சினிமாவில் நடிப்பதை தற்போது நிறுத்தி இருக்கிறார். நாட்டுக்கு நல்லது செய்வதற்கு நிறையப் பேர் வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் நாட்டுக்கு நல்லது செய்வதற்கு முன்வந்தால் மகிழ்ச்சியான விஷயம்.

பெண்களை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப் போகிறேன். அது தொடர்பான கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. பெண் சக்தி என்பது குறித்தான படம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஐஎம்டிபி ரேட்டிங்கில் தென்னிந்தியப் படங்கள் தான் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். இந்தியன் என்று சொல்லும்போது சந்தோசமாக இருக்கிறது. தமிழன் என்று சொல்லும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. தென்னிந்தியப் படங்களுக்கு இப்படி ஒரு மரியாதை கிடைத்திருப்பது சந்தோஷம்தான்.

காவி தொடர்பான சர்ச்சை நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற கலர் கலரான பிரச்சினைகள் வரக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். யாருக்கும் தெரியாத படங்களுக்கு பிரச்சினை வராது. வாரிசு போன்ற பிரபலமான படங்களுக்கு பிரச்சினை வந்தால்தான் அந்தப் படம் பிரபலமாகும். பிரச்னை எல்லாம் தாண்டி நடிகர் விஜய் எப்படி குதித்து வருகிறார் என்பதும் ஒரு ஹீரோயிசம்தானே. வாரிசு படத்தை பார்ப்பேன் என சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும்” என்றார்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.