விகேபுரம்: ஒன்றிய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கடந்த 2015ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசு இத்திட்டத்துக்கு 68% நிதி ஒதுக்குகிறது. இதற்கான மானிய தொகை ரூ.2.75 லட்சம். இத்திட்டத்தின்படி 269 சதுர அடிகள் கொண்ட கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படுகிறது. இதில் ஒரு ஹால், அறை, சமையலறை, கழிப்பறைகள் இடம் பெற்றிருக்கும். இத்திட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது, தமிழக அரசு தனது நிதியை கொண்டு முழு வீச்சில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமப்புறங்களில் கணக்கெடுக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். கணக்கெடுக்கப்படும் வீடுகள் தொடர்பான பட்டியல் கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக அரசின் நிதியை கொண்டு கிராமப்புறத்தில் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓலை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசிப்பவர்கள், தகுதியற்ற வீட்டில் வசிப்பவர்கள் பட்டியல் கணக்கெடுக்கப்படுகிறது. இப்பணி அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றனர்.