புதுடில்லி, டிச. 17-
‘அடுத்தாண்டு மே 7ம் தேதி, இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வும், மே 21 – 31 வரை மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, ‘க்யூட்’ நுழைவுத் தேர்வும் நடத்தப்படும்’ என, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
என்.டி.ஏ., அறிக்கை
வரும் 2023 – 24ம் கல்வியாண்டுக்கான முக்கிய தேர்வுகளின் பட்டியலை என்.டி.ஏ., அறிவித்து உள்ளது.
இது குறித்து என்.டி.ஏ.,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எம்.பி.பி.எஸ்., எனப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு அடுத்தாண்டு மே 7ல் நடக்கும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், தகுதி மற்றும் நிபந்தனைகளை மாணவர்கள் படிக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேதி அறிவிக்கப்பட்டதும், என்.டி.ஏ.,வின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ‘ஆன்லைன்’ வாயிலாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வு, ஜன., 24 முதல் 31 வரை நடத்தப்படும்.
‘க்யூட்’ தேர்வு
மத்திய பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு க்யூட் என்ற பொது நுழைவுத்தேர்வு, 2022 – 23ம் கல்வியாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு மே 21 – 31 வரை இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
இதற்கான சேர்க்கை நடைமுறை அடுத்தாண்டு ஜூலைக்குள் நிறைவடையும். நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை அடுத்தாண்டு பிப்ரவரியில் இருந்து துவங்கும்.
இந்தத் தேர்வுக்கும், மாணவர் சேர்க்கைக்கும் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது. தமிழ், தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் தேர்வு நடக்கும்.
இதற்காக நாடு முழுதும், 1,000க்கும் அதிகமான தேர்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்