இன்பநிதியும் முதலமைச்சராக வரவேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மாநகரம் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை எப்போதும் திமுக அரசைக குறைகூறிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பிய அவர், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதிலேயே குறிக்கோளாக இருப்பதாக விமர்சித்தார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடியாக இருந்த நிலையில், பிரதமர் மோடி காலத்தில் 135 லட்சம் கோடி கடனாக மாற்றியிருப்பதான் பொருளாதார வளர்ச்சியா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கூறிய அவர், திமுக வாரிசு அரசியல் தான் செய்வதாக கூறினார். கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகி இருக்கிறார். விரைவில் அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவித்த வி.பி.ராஜன், தான் இருக்கும்போதே இன்பநிதியும் முதலமைச்சராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வி.பி.ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு அவரது மகன் தான் கட்சி கொடியை தூக்கிப் பிடிப்பார். ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் அவர்களது குடும்பத்தில் இருப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது ஆசை. திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது, அதனால் நாட்டு மக்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிட்டது என்றும் வினவினார். அமைச்சராக இப்போது பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அவரது மகன் இன்பநிதி முதலமைச்சராக வரவேண்டும் என திமுக உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.பி.ராஜன் பேசியிருப்பது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.