புதுடில்லி: நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள், கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராஜ்ய சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 13,92,179ஆக இருந்தது. இது 2021ம் ஆண்டில் 14,26,447ஆகவும், தற்போது 2022ம் ஆண்டில் 14,61,427 ஆகவும் அதிகரித்துள்ளது. இது வரும் 20025ல் 12.8 சதவீதம் அதிகரிக்கலாம்
நுரையீரல் சம்பந்தமான புற்றுநோயால் ஆண் மற்றும் பெண் இருவரும் பாதிப்படைக்கின்றனர். இதில் 14 வயதிற்குட்பட்டோர் (ஆண்- 29.2%, பெண்- 24.2%) . புற்றுநோயால் 60 வயதுக்கு மேற்பட்டோர் பாதிப்பு நிலவரம் 2011ம் ஆண்டில் 8.6% ஆக இருந்தது. தற்போது 2022 ம் ஆண்டில் 9.7% ஆக அதிகரித்துள்ளது.

புற்றுநோய் மரணங்கள் 2020ம் ஆண்டில் 7,70,230 மற்றும் 2021ம் ஆண்டில் 7,89,202, தற்போது 2022ம் ஆண்டில் 8,08,558 என அதிகரித்துள்ளது. புற்றுநோயாளிகளுக்கு பல்வேறு அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புற்றுநோயாளிகளின் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
2022-23-ம் நிதியாண்டில் கடந்த 5ம் தேதி வரை 40 பேருக்கு ரூ.2.16 கோடி செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு நிதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 64 பேருக்கு ரூ.5.85 கோடி நிதியும், 2019-20-ம் நிதியாண்டில் 196 பேருக்கு ரூ.15.72 கோடி நிதியும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement