பத்தனம்திட்டா: சென்னை தாம்பரம் சிறுமி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனம் மலைப்பாதையில் விபத்திற்குள்ளானதில் 10வயது சிறுமி உயிரிழதார், வாகனத்தில் இருந்தவர்களில் 10க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை 3 மணி அளவில் கேரள மாநிலம் முண்டகாயம் எருமேலி மாநில நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை பக்கவாட்டில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கன்னிமலையில் இருந்து கீழ்நோக்கி இறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கு உள்ளான வாகனத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து சபரிமலைக்கு சென்றவர்கள் பயணித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில், 10 வயது சிறுமி சங்கமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான வாகனத்தில் மொத்தம் 21 பேர் பயணித்துள்ளனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த கோரமான விபத்தில் உயிரிழந்த சிறுமி சங்கமித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக, எருமேலி மருத்துவமனையில் இருந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள்
காஞ்சிரப்பள்ளி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்ப தரிசனத்துக்கு சென்ற சிறுமி விபத்தில் இற்ந்தது குறித்து தகவலறிந்த உறவினர்கள், சங்கமித்ராவின் சடலத்தைப் பெறவும் காயமடைந்தவர்களை அழைத்து வரவும், தாம்பரத்தில் இருந்து கேரளா சென்றிருக்கின்றனர். சபரிமலைக்கு சென்றபோது சிறுமி உயிரிழந்து தாம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையில், சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐஆர்பி) கூடுதல் போலீசார் வரும் 18ம் தேதி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் வரும் நாட்களில் அதிகளவான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, ஐயப்ப பக்தர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை கூடுதல் பாதுகாப்பிற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐஆர்பி) வரவழைக்கப்பட்டிருப்பதாக கேரள டிஜிபி அனில் காந்த் தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் 80 பேர் 18ம் படி ஏறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என்றும் கேரள மாநில டிஜிபி அனில் காந்த் தெரிவித்தார்.