புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம் பட்டி கிராமத்தில் வசித்து வந்த 60 வயதான விவசாயி சண்முகம் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் மயக்க நிலையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, சண்முகத்தை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கே அவருக்கு முதல் கட்ட இறுதிச் சடங்குகள் ஆரம்பித்தன.
சண்முகத்தின் மகன் சுப்பிரமணியன் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து இருந்ததால் அவர் தந்தை இறப்பிற்காக மாலையை கழட்டி உள்ளார். பின் தந்தைக்கு பால் ஊற்றி கொண்டிருந்தார். திடீரென சுப்பிரமணியனுக்கு அருள் வந்து சுப்பிரமணியன் இறக்கவில்லை உயிருடன் எழுந்து வருவார் என்று சாமியாடினார்.
தந்தை இறந்த துக்கத்தில் இப்படி சுப்பிரமணியன் பிதற்றுவதாக உறவினர்கள் எண்ணியுள்ளனர். ஆனால், திடீரென சண்முகத்தின் கை, கால்கள் அசைய தொடங்கியது. பின் அவர் எழுந்துள்ளார். இதை கண்ட உறவினர்கள் பதறிப் போய் இருக்கின்றனர்.
அவரது உடல் நலனும் முன்னேறி இருக்கின்றது. இறப்பு செய்தியை கேள்விப்பட்டு பலரும் துக்கம் விசாரிக்க வந்த நிலையில் சண்முகம் நலமுடன் இருப்பது தெரிந்து கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.