தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவில்லை முன்னாள் மாணவராக வந்துள்ளேன் என பேசி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “நான் படித்த பள்ளிக்கு மீண்டும் போகப் போகிறேன் என்று நேற்று இரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன். என்னை முதல்வனாக்கியதும் இந்த பள்ளி தான் முதலமைச்சராக என்னை உருவாக்கியதும் இந்த பள்ளி தான். தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சரின் மகனாக இருந்தும் நான் தினமும் பள்ளிக்கு வர அரசு பேருந்தில் தான் வந்து செல்வேன். நான் இப்பொழுது தமிழக முதலமைச்சராக வரவில்லை முன்னாள் மாணவனாக மட்டுமே வந்துள்ளேன்.
எனக்கு நீங்கள் தமிழை சாதாரணமாக கற்றுத் தரவில்லை அடித்து அடித்து கற்றுக் கொடுத்தீர்கள். நான் பள்ளியில் படிக்கும் பொழுது ஒரு நாளும் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை. இன்று மீண்டும் பள்ளிக்கு வரும் பொழுது கூட பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். நான் படித்த இந்த பள்ளி பல நினைவுகளை எனக்கு ஞாபகப்படுத்துகிறது என முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.