“மக்களை வஞ்சிக்கிறது திமுக அரசு” – ஆவின் நெய் விலை உயர்வுக்கு தமாகா கண்டனம்

சென்னை: வாக்களித்த மக்களுக்கு விலை ஏற்றத்தை மட்டுமே திமுக அரசு பரிசாக கொடுத்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணித் தலைவர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, தொடர்ந்து சிமென்ட், செங்கல், மணல், ஆவின் பால் விலை, என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளார்கள்.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆவினில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை திமுக உயர்த்தியது. அப்போது நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 21, 2022 ஆம் தேதி ஒரு லிட்டர் நெய்யின் விலை 535-லிருந்து 580 ஆக (ரூபாய் 45) இரண்டாவது முறையாக உயர்த்தியது. இன்று மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் நெய் விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்வு. ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.125 வரை அதிகப்படுத்தி இருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்.

மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களை போல நாடகமாடிய இந்த திறனற்ற திமுக அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏமாற்று வாக்குறுதிகள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் மீது சுமத்தப்படும் வரிகள் மற்றும் விலையேற்ற நடவடிக்கைகள் இருக்கிறது.

இந்த விலையேற்றமானது சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு பின்னடைவை நோக்கி செல்ல வழிவகுக்கும். எனவே மக்களுக்கு எந்த ஒரு விடியலையும் தராத இந்த திமுக அரசு இனியாவது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.