கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அதிலும் குறிப்பாக விவசாயிகள் மன சம்மதத்துடன் கொடுப்பதற்கு முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக அந்தக் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “விவசாய நிலங்களை அழிக்காத வகையில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும்.
தமிழக அரசு அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் விவசாயிகளுக்கே கிடைத்த வெற்றி. இதேபோல் தென் தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்” என்று பா.ஜ.க. வலியுறுத்துவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.