புதுடெல்லி: டெல்லியில் போலி ஆவணங்களுக்கு விசா வழங்கிய பிரெஞ்சு தூதரக ஊழியர்கள் உட்பட 6 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் விசா துறையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் உட்பட ஆறு பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட அறிவிப்பில், ‘டெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் விசா பிரிவில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் உட்பட 6 பேரும், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை விசா மோசடி செய்துள்ளனர்.
ஐந்து மாதங்களில், போலி ஆவணங்களின் அடிப்படையில் பஞ்சாப் மற்றும் ஜம்முவைச் சேர்ந்த பல விண்ணப்பதாரர்களுக்கு பிரெஞ்சு விசாக்களை வழங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இளம் விவசாயிகள், பஞ்சாபைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள் ஆவர். இதற்காக தூதரக ஊழியர்களான சுபம் மற்றும் ஆர்த்தி ஆகியோர் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாவுக்காக தலா ரூ.50,000 லஞ்சம் பெற்றுள்ளனர்.
பிரெஞ்சு தூதரகத்தின் விசா துறைத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல், அவர்கள் தங்களது விருப்பத்தின் பேரின் விசாக்களை வழங்கி உள்ளனர். பின்னர், அதற்கான ஆதாரங்களையும் அழித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் பிரெஞ்சு தூதரகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தற்போது விசாரணை நடத்தி 6 பேரையும் கைது செய்துள்ளோம். அவர்களின் டெல்லி, பாட்டியாலா, குர்தாஸ்பூர் மற்றும் ஜம்முவில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினோம். அங்கிருந்து செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள், சந்தேகத்திற்குரிய பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி உள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைர வியாபாரி மீது மேலும் 2 எப்ஐஆர்: பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி, இந்திய வங்கிகளில் கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 55.27 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து, மெஹுல் சோக்ஸி மற்றும் பலர் மீது சிபிஐ இரண்டு புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில், ஐ.எஃப்.சி.ஐ வங்கியில் வைரங்கள் மற்றும் நகைகளை அடகு வைத்து ரூ .25 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரால் சோக்ஸி மற்றும் அவரது நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ், ஷ்ரெனிக் ஷா நரேந்திர ஜவேரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.