எல்லை பாதுகாப்பில் மாநிலங்களுக்கும் பங்கு உண்டு: உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

கொல்கத்தா: எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை எல்லைப்பாதுகாப்பு வீரர்களுடன் சேர்ந்து அந்தந்த மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 25வது கூட்டம் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஒடிசா அமைச்சர் பிரதீப் அமாத் மற்றும் 5 மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், எல்லையில் சட்டவிரோத ஊடுருவல், எல்லை தாண்டிய கடத்தல், இந்திய-வங்கதேச எல்லை பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வசதிகள், நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜார்கண்ட் -ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் மற்றும் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது  பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி அண்டை மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் இந்த அச்சுறுத்தலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் கோரிக்கை விடுத்தார்.  கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘இந்திய எல்லை பகுதிகள் பாதுகாப்பை எல்லைப்பாதுகாப்பு வீரர்களுடன் மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லை பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது” என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* நிதிஷ், நவீன் பட்நாயக் தவிர்ப்பு
கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.