கோவை: 2024 என்பது மோடிக்கான தேர்தல். அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. அதில், குழப்பம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்னூர் அருகே டிட்கோ தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் விவசாயிகளோடு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், 3,862 ஏக்கர் நிலத்தில், தரிசு நிலமாக உள்ள 1,630 ஏக்கர் நிலத்தை மட்டும் அரசு எடுத்துகொள்ளும். எஞ்சியுள்ள நிலத்தை விவசாயிகளாக அளித்தால் வாங்கிகொள்கிறோம் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அரசாணையை தளர்த்தி 1,630 ஏக்கர் தவிர, எஞ்சியுள்ள நிலத்துக்கு அரசாணை பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும். அப்போதுதான், அந்த நிலங்களை விவசாயிகள் தங்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்வர்.
பதப்படுத்தப்பட்ட பாலில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களின் விலையையும் ஆவினில் உயர்த்தியுள்ளனர். பால் விலையை உயர்த்திய பிறகு, ஆவின் பால் பாக்கெட் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்குபாலை வாங்கி, இன்னொருபுறம் ஆவினில் கார்ப்பரேட் நிறுவனம்போல விற்கின்றனர். எனவே, ஆவினில் விலையேற்றத்தை நிறுத்தி, விவசாயிகளுக்கு அதிக விலையை அளிக்க வேண்டும்.
திமுக அமைச்சர்களுக்கு ஒரேவேலை உதயநிதியை புகழ்வதுதான். அவர்கள் பேசுவதை கேட்பதற்கே துரதிருஷ்டவசமாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு தகவல், ஒளிபரப்புத்துறைதான் சரியாக இருக்கும். எல்லோரும் சினிமா எப்படி எடுக்கிறார்கள், எத்தனை படங்களை வெளியிடலாம் என பார்க்க சரியாக இருக்கும். இதன்மூலம் திரைத்துறையை முதலிடத்துக்கு உதயநிதி கொண்டுவந்துவிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திமுகவோடு பாஜக கூட்டணி வைக்கும் என்று கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “எந்தக் கட்சி எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்பதை அந்தந்த கட்சியில் உள்ள தலைவர்கள் பேசினால் சரியாக இருக்கும். யூகங்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்.
இன்றைய தேதியில் பாஜக எப்படி வளர்ந்துவருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக இங்கே அரசியலில் இருப்பது ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்குதான் கட்சியை நடத்தி வருகிறோம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளைபோல, நாமும் உயிர்வாழ கூடவே இருக்கலாம் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
சரியான, நேரம் காலம் வரும்போது பேசுவோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் தீர்மானிப்பார்கள். 2024 என்பது மோடிக்கான தேர்தல். அதிமுக, பாமக, தேமுதிக ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. அதில், குழப்பம் இல்லை” என்றார்.