திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த திருமழிசை துணைக் கோள் நகரம் அருகே புதிய பேருந்து நிலையம் 25 ஏக்கரில் ரூ. 336 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது.
இப்பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில், திருமழிசை புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமழிசையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் 70 அரசு பேருந்துகள் மற்றும் 30 தனியார் பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 37 புறநகர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகளை நிறுத்த பார்க்கிங் வசதி, பராமரிக்கபணிமனை வசதி அமைக்கப்படுகின்றன. மாநகர பேருந்துகளை இயக்க தனியாக 36 பேருந்துகள்நிறுத்தும் இடம் அமைக்கப்படுகிறது. மேலும், பணியாளர்களுக்கு 186 படுக்கை அறைகளுடன் கூடிய ஓய்வு அறை, குடிநீர் வசதி, 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி,மழைநீர் வடிகால்வாய், உயர் அழுத்த மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் இடம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புவழித் தடம், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி கழிப்பறைகள், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறைகள், லிப்ட்டு வசதிகள், நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கப்படும்.
இவை தவிர, பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் 3.75 ஏக்கரிலும், அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் 2.5 ஏக்கரில் பசுமை பகுதியும் அமைய உள்ளது. இப்பேருந்து நிலையம் ஜுன் மாதம் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்த ஆய்வின்போது பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளரச்சித் துறை முதன்மை செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ராமற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இப்பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி,ஓசூர் ஆகிய மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். இதனால், சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.