திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சேதமடைந்து உள்ள பயணிகள் நிழற்குடைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நகர், புறநகர், கிராம பகுதிகளில் பல ஊர்களில் பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர் என பலரும் சேதமடைந்த நிழற்குடையில் நிற்க முடியாமல் வெளியே நிற்கின்றனர். இதுதவிர, பல நிழற்குடைகள் இடியும் நிலையில் உள்ளது.
அதனால் உள்ளே நிற்க அச்சப்பட்டு வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பயணிகள் நிற்கும் நிலை உள்ளது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட நிழற்குடைகள் பயன்பாடின்றி உள்ளது. திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் பஸ்கள் செல்லாத இடத்தில் பல லட்ச ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனால் நிதி வீணாகி உள்ளது. இது மட்டுமின்றி பராமரிப்பின்றி கிடக்கும் நிழற்குடையில் சிலர் சட்ட விரோதமாக மது அருந்துவது, போதையில் ரகளையில் ஈடுபடுவது உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணம் வீண் இதுகுறித்து திண்டுக்கல் சேர்ந்த சிவசண்முகம் கூறுகையில், ‘திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் பல லட்சம் ரூபாய் செலவில் அளவில் அமைக்கப்பட்ட நிழற்குடை பயன்பாடு இன்றி சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் மேம்பாலம் கட்டப்படுவதால் பஸ் போக்குவரத்து இல்லை. ஆனாலும் கடந்த அதிமுக அரசு பயணிகள் நிழற்குடை கட்டி பணத்தை வீணடித்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
பயணிகள் பாதிப்பு
இதுகுறித்து பேகம்பூரை சேர்ந்த லாரன்ஸ் கூறுகையில், ‘திண்டுக்கல்- மதுரை ரோட்டில் அவர் லேடி பள்ளி அருகே அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை எந்த பயன்பாடும் இன்றி உள்ளது. பஸ்கள் ஓரிடத்திலும், நிழற்குடை ஓரிடத்திலும் உள்ளதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பயணிகள் நிற்கும் இடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்’ என்றார்.