டெல்லி: விலை இரு மடங்காக இருந்தாலும் இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். சீன பொருட்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது: – இந்தியா மீது தாக்குதல் நடத்தும் சீனாவிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை, பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறது? சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
பொருட்களில் விலை இரு மடங்காக இருந்தாலும் இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நிரூபித்துள்ளது. நாட்டிலேயே குறைந்த அளவு பணவீக்கம் கொண்ட மாநிலம் டெல்லிதான். மாற்றத்தை கொண்டு வருவதற்கும் சாதி மதம் என சண்டையிட்டுக்கொள்ளாத இந்திய தேசத்தை உருவாக்குதற்குமான வாகனம் தான் ஆம் ஆத்மி. கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளில் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ள ஒரே கட்சி ஆம் ஆத்மிதான். குஜரத்தில் ஆம் ஆத்மி 2027- ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்கும்’ என்றார்.